சனி, 27 ஜூன், 2009

பிரியம்

உனக்கும் எனக்குமான இடைவெளியில்
நீளும் இந்த இருப்புப் பாதை
இணைந்து விடவும் கூடும்
அந்திக் கருக்கலை தாண்டி.

கருகி விட்ட பிரியம்
மீண்டும் முளைத்து விடும்
நீயும் நானும்
அறியாத ஒரு கணத்தில்.

ஆதலால்

சலனமற்று கிடக்கும்
இந்த புகைப்படங்களை
நான் வைத்துக்கொள்கிறேன்.

எப்போதும் நீயெனக்கு கொண்டுவரும்
ரோஜா செடிகளை
நீயே வைத்துக்கொள்.

வெள்ளி, 26 ஜூன், 2009

புதிர்வட்டப்பாதையில் மரணம்-நாவல்

குற்ற உணர்வையும்,சஞ்சலத்தையும் தரும் முன்னிலையை முற்றாக நிராகரிப்பதின் மூலமும்,அதை சகல கீழ்மைகளின் முழு உருவமாக உருவகிப்பதின் மூலமும் சாதாரண ஒரு லௌகீக மனம் அதிலிருந்து தப்பித்துக் கொள்கிறது.
-கென்னி கமாலியல் சான் ஜோஸ் மனிதவியல் கருத்தரங்கில் ஆற்றிய உரையிலிருந்து


கென்னி கமாலியல் அகாலத்தில் அபத்தமான முறையில் மரணமடைந்தான் என்பதை நம்ப மறுக்கிறாள் அவனுடன் பல்கலைகழகத்தில் படித்த,இராணுவத்தில் பணிபுரியும் கணவன் வீட்டிற்க்கே வருவதில்லை என்று குறைக்கூறித் திரியும் அவனுடைய தோழி ஜெனிற்றா.அவன் இப்போதும் ரியோ ப்ராங்கோவிலிருந்து கிழக்கே நானூற்றைம்பது மைல் தொலைவிலுள்ள நெவியே காடுகளில் தனது ஆய்வின் பொருட்டு சடைமுடியுடன் அலைவதாகவும் கூறுகிறாள்.மேலும் அவன் அபத்தமான முறையில் மரணமடையும் ஒரு கோழையில்லையென்றும்,அவனது சமூக பிரக்ஞை அக்காலத்தில் தன்னை வியக்கவைத்திருந்த்தாகவும்,படித்துக்கொண்டிருந்த காலம் தொட்டே தான் சார்ந்த சமூக மேம்பாட்டிற்க்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த ஒரு அறிவுஜீவி எனவும் கூறுகிறாள் அவள்.

நான் எழுதிக்கொண்டிருக்கும் “புதிர்வட்டப்பாதையில் மரணம்” நாவலின் முதல் பத்தி

வியாழன், 25 ஜூன், 2009

உன் மீது படியும் நிழல்கள்

உன் மீது படியும் நிழல்களை
துடைத்தழித்துக் கொண்டே
நடந்து வருகிறாய்.

நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

தேடி வந்து படியும் நிழல்களெல்லாம்
உனதல்லயென்று என்னை நம்ப வைக்க
முயற்சிக்கிறாய்.

நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

படியும் நிழல்கள் மட்டுமல்ல
உன்னை தொடரும் நிழல்களும்
உனதல்லயென்று கூறுகிறாய்.

நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பரிவு

வெளிச்சம் நோக்கி ஊர்ந்த
பூரானுக்கு கேட்டிருக்காது
எனது ச்சூ ச்சூ.

அத்தைக்கு கேட்டு
என்னவென்று கேட்டப்போது
சொல்லவே இல்லையே அதைப்பற்றி.

சொல்லியிருப்பேனெனில்
மாமா எழுந்திருக்கவும்
அது இறந்திருக்கவும் கூடும்.

ஒரு மாலைப் பொழுதின் பல சந்தர்பங்களில் உனக்காக நான் சேர்த்து வைத்தவை.

மீட்கப்படும் ஒவ்வொரு கணமும்
ஒடுங்கி அதிரும் குரல்
மீட்பின் குரூரத்தையே சொல்லிக்கொண்டிருக்கிறது
வெகு நாட்களுக்கு.

எழுதப்படும் ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும்
வாழ்வை தேடிச் சலிக்கும்
மனம்
மீண்டும் எழுதத் தொடங்குகிறது
வாழ்வின் வரிகளை.

சொல்லப்படும் ஒவ்வொரு ஆசுவாசமும்
சொல்பவனின் ஆசுவாசமாகவே மிஞ்சுகிறது
என்னால் பொருத்துக் கொள்ள முடியவில்லை
அதிலிருந்து நீளும்
வலியின் விரல்களை.

எடுக்கப்படும் ஒவ்வொறு உறுதிபாடும்
உறுதியாகவே இல்லை
உனது பொய்களைப் போல.

நீ இல்லாத எனதிந்தறை

நீ இல்லாத எனதிந்தறையில்
இன்னும் ஓயவில்லை
நீ இல்லாத எனதிந்தறைக்கான
விசும்பல்

கால் மிதிபடும் தரை முழுவதும்
அசையாமல் கிடக்கிறது
நீ
கொண்டு செல்ல மறந்த
உனதிந்த நிழல்கள்

மிதிபடவும் செய்கிறது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை
உனதிந்த நிழல்களை
எனதாக்கிக் கொண்டு.